சென்னையில் உள்ள விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் 2 பேரது வீடுகளிலும் தீவிரமாக சோதனையிட்டனர்.
சென்னை,
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பகல் 12.56 மணிக்கு மர்ம நபர் போனில் பேசினார். அப்போது அவர், ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், குண்டு வெடிக்கப்போகிறது’ என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
விஜயகாந்தின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் விருகம்பாக்கம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் விஜயகாந்த் வீட்டில் தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பிற்பகல் 2.30 மணி அளவில் மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அதே மர்ம நபர் போனில் பேசினார். அப்போது ‘நடிகர் தனுஷ் வீட்டில் குண்டு வெடிக்கப்போகிறது’ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். தனுஷ் வீடு, சென்னை அபிராமபுரம், வெங்டேஷ்வரா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.
அங்கு அபிராமபுரம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்று சோதனையிட்டனர். அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதுவும் வெறும் புரளி என்று கண்டறியப்பட்டது. அடுத்தடுத்து வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல் போன் அழைப்புகள் சென்னை போலீசாரை கலங்கடித்து விட்டது.
இதுபோல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசி நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் குண்டு வெடிக்கப்போகிறது என்று புரளியை கிளப்பி விட்டு, சென்னை போலீசுக்கு தொல்லை கொடுத்து வருபவர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் (வயது 28) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தான்.
இவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசி ஜெயிலுக்கு போனவர். அடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் நடிகர் சூர்யாவின் அலுவலகத்திலும் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக புரளியை கிளப்பி விட்டு கைதானார். இவரை பல முறை போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி விடுகிறார்கள். புரளி என்று தெரிந்தாலும் நடவடிக்கை எடுக்காமல் போலீசாரால் விட முடியாது.
நேற்றும் விஜயகாந்த், தனுஷ் வீடுகளில் குண்டு வெடிக்கப்போவதாக சொல்லி போலீசை கலங்க வைத்தவர் இவர்தான் என்று தெரிய வந்துள்ளது. அடிக்கடி இதுபோல் போலீசுக்கு தொல்லை கொடுத்து வரும் இவரை கோர்ட்டு அனுமதி பெற்று மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
அவரது வெடிகுண்டு மிரட்டல் விளையாட்டுகளுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story