“பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்” - நடிகை குஷ்பு பேட்டி


“பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்” - நடிகை குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2020 3:45 AM IST (Updated: 14 Oct 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

‘பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்’ என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.

சென்னை, 

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, நேற்று முன்தினம் அக்கட்சியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பா.ஜ.க.வில் இணைந்த நடிகை குஷ்பு நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், துணைத்தலைவர் சக்ரவர்த்தி, மீனவப்பிரிவு தலைவர் எஸ்.சதீஷ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் குஷ்புவை வரவேற்று கமலாலயம் அழைத்து சென்றனர். அங்கு பாரதமாதா, தமிழன்னை சிலைகளுக்கும், பா.ஜ.க. நிறுவனர்கள் தீனதயாள் உபாத்யாயா, ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரது உருவப்படங்களுக்கும் நடிகை குஷ்பு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல காலமாக ஒரு கட்சியில் இருந்து, நாட்டுக்கு நல்லது தான் செய்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தேன். ஆனால் மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எனக்கு தெரியவந்தது. மிகவும் நிதானமாக பலமுறை யோசித்த பின்பே நான் பா.ஜ.க.வில் இணைந்தேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பா.ஜ.க. வளர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அடிக்கடி கட்சி மாறும் அரசியல் நிலைப்பாடு உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவில்லையா?

பதில்:- மாற்றங்கள் இருக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது. கொள்கைதான் மாறக்கூடாது.

கேள்வி:- பா.ஜ.க.வில் இணைந்த பின்னரும் பெரியார்வாதியாக இருப்பீர்களா?

பதில்:- பெண்களுக்கு ஆதரவாகவும், தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் தீரவும் குரல் கொடுத்தவர்தான் பெரியார். பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு முதல் ஆளாக நானும் குரல் கொடுத்து தான் வருகிறேன். அந்த அடிப்படையில், பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்.

கேள்வி:- காங்கிரஸ் கூட்டங்களை ஷூட்டிங் என்ற பெயரில் நீங்கள் புறக்கணித்ததாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:- காங்கிரஸ் கட்சியில் கடைசியாக நடந்த பல கூட்டங்களில் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தனது தவறுகளை மறைப்பதற்காக என்மீது பழி போடுகிறார், கே.எஸ்.அழகிரி. நான் எந்த ஷூட்டிங்கும் போகவில்லை. ‘அண்ணாத்த’ படத்தில் கூட 20 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது. மாதத்தில் 5 நாட்கள் போக மீதமுள்ள 25 நாட்களும் கட்சி பணியாற்ற தயாராகத்தான் இருந்தேன். அந்த 25 நாட்களும் காங்கிரஸ்காரர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்களா? யாரும் எனக்கு எந்த வித அழைப்பும் விடுக்கவில்லையே.

கேள்வி:- சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்பீர்களா?

பதில்:- பா.ஜ.க.வில் இப்போதுதான் இணைந்துள்ளேன். எனக்கு முன்பாக பல தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். நியாயப்படி அவர்கள்தான் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- உங்களது கணவர் சுந்தர்.சி. கொடுத்த அழுத்தம் காரணமாக தான் பா.ஜ.க.வில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே?

பதில்:- நானும், எனது கணவரும் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுகூட கிடையாது. அப்படித்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக மற்றவர் மீது கே.எஸ்.அழகிரி பழிபோடுகிறார்.

மேற்கண்டவாறு குஷ்பு பதில் அளித்தார்.

முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நடிகை குஷ்புவுக்கு சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு ஆளு உயர மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வில் இணைந்தது சந்தோஷமாக இருக்கிறது. நான் பா.ஜ.க.வில் இணைவதற்கு காரணம் மாநில தலைவர் எல்.முருகன் தான். தன் கட்சியை வளர்க்க எல்லாரிடமும் பேசி, இந்த கட்சியால் தான் நாட்டிற்கு நல்லது செய்ய முடியும் என்று புரிய வைத்து அழைக்கிறார். ஆனால் 6 ஆண்டுகளாக அந்த தேசிய கட்சியில் இருந்த என்னை அக்கட்சியின் தலைவர் தன்னை நடிகையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

6 ஆண்டுகள் கழித்து தான் நான் நடிகையாக அவர்களுக்கு தெரிகிறேன். காங்கிரஸ் கட்சியை விட்டு ஒருவர் ஏன் விலகி வெளியில் செல்கிறார் என்று யோசிக்கும் திறன் அவர்களுக்கு கிடையாது.

6 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு என்னுடைய நேரம், உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வெளியே வந்து உள்ளேன். சிந்திக்கிற திறன் இல்லாத ஒரு கட்சியாக காங்கிரஸ் இருந்து உள்ளது. தி.மு.க.வில் இருந்து வெளியேறும் போது அக்கட்சியினர் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வரும்போதும் பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் நான் வைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய என்னை பற்றி தவறாக பேசும்போது நிச்சயமாக பதிலடி தந்து தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story