தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 Oct 2020 3:49 AM IST (Updated: 14 Oct 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 83 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,834 ஆண்கள், 1,832 பெண்கள் என மொத்தம் 4,666 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 30 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,164 பேரும், கோவையில் 398 பேரும், சேலத்தில் 277 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 16 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 82 லட்சத்து 46 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 216 ஆண்களும், 2 லட்சத்து 63 ஆயிரத்து 682 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 930 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரத்து 031 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் என 57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 13 பேரும், கோவையில் 5 பேரும், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருப்பூரில் தலா 4 பேரும், கடலூர், கிருஷ்ணகிரி, சேலத்தில் தலா 3 பேரும், ஈரோடு, காஞ்சீபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூரில் தலா இருவரும், விழுப்புரம், தூத்துக்குடி, தேனி, நீலகிரி, மதுரை, திண்டுக்கலில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 371 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 117 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,217 பேரும், கோவையில் 478 பேரும், செங்கல்பட்டில் 326 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 43 ஆயிரத்து 239 பேர் உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story