அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: கவர்னருக்கு அனுப்பிய மசோதாவின் நிலை என்ன? - 2 நாளில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கெடு


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: கவர்னருக்கு அனுப்பிய மசோதாவின் நிலை என்ன? - 2 நாளில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கெடு
x
தினத்தந்தி 15 Oct 2020 12:15 AM GMT (Updated: 14 Oct 2020 8:44 PM GMT)

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக, ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாவின் நிலை என்ன? என கவர்னரின் செயலாளர் 2 நாளில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, 

மதுரையை சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5 சதவீதம் உள் இடஒதுக் கீடு அளிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட 6 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து, அதன் அடிப்படையில் அறிக்கையையும் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கியது.

பின்னர் அந்த அறிக்கையை கவர்னரின் அனுமதிக்காக அரசு அனுப்பியது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியாக உள்ளது. நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாமல் நீட் தேர்வு முடிவை வெளியிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த குழு பரிந்துரையை அமல்படுத்திய பின்பு நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும். அதுவரை நீட் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள்கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா எப்போது நிறைவேற்றப்பட்டது? அந்த சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னர் அலுவலகத்தில் இதன் நிலை என்ன, தமிழகத்தில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அதில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் வக்கீல், “கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு முன்பு அரசுப்பள்ளிகளில் படித்த ஒரு சதவீதம் பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் அதுவும் இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2 கல்வி ஆண்டுகளில் அரசு பள்ளியில் படித்த 11 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு சென்று உள்ளனர்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும் அரசியல் கட்சியினர், இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு உள்ளனர். பெரும்பான்மையான மாணவர்களின் எதிர்காலம் இந்த முடிவை நோக்கித்தான் உள்ளது. ஓரிரு நாட்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே இந்த விஷயம் தொடர்பாக தமிழக கவர்னரின் தனி செயலாளர் இன்று (நேற்று) பிற்பகலிலேயே பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு மற்றும் உத்தரவை கவர்னரின் செயலாளருக்கு உடனடியாக இ-மெயில் மற்றும் ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு நேற்று மாலை 4.30 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, “நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய குழுவின் பரிந்துரை மீதான முடிவெடுப்பது குறித்து தெரிவிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகளிடம் கோரினார்.

ஆனால் அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், “இது லட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே இதை தள்ளிப்போடக்கூடாது. 2 வாரம் அவகாசம் வழங்கினால் அதற்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிடும். இதுதொடர்பாக சட்டசபையில் முடிவெடுத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் இடஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவு எடுக்க தாமதம் செய்வதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) கவர்னரின் தனி செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்று அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையையும் அன்றைக்கே ஒத்திவைத்தனர்.


Next Story