தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்


தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
x

தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பகுதியில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் சென்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சர்வர் பிரச்சினை காரணமாக கைரேகை பதிவு செய்து பொருட்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தமிழகம் முழுவதும் பல்வேறு ரேஷன் கடைகளில் புகார்கள் எழுந்தன. சில பகுதிகளில் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் கடைகளை அடைத்துவிட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில், இணையதள சர்வரை சரி செய்யும் வரையில் பயோ-மெட்ரிக் முறையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பயோ-மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏற்கனவே ரேஷன் கடைகளில் பின்பற்றப்பட்டு வந்த ரேஷன் கார்டுகளை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறையை பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் தங்கள் ரேஷன் அட்டைக்கு உரிய கடைகளில் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Next Story