சென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு 166 விமான சேவையில் 15 ஆயிரம் பேர் பயணம்
சென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு 166 விமான சேவைகளில் 15 ஆயிரத்து 350 பேர் பயணம் செய்தனர்.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த மார்்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து மே மாதம் 24-ந் தேதி வரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 25-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவையில் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்து இருந்தது. பின்னர் இந்த கட்டுபாட்டுகளில் தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டது.
இந்தியாவிற்குள் மாநிலங்கள் இடையே இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம் என மத்திய அரசு விலக்கியது. ஆனால் தமிழக அரசு, தமிழ்நாட்டில் மாவட்டங்கள் இடையே மட்டும் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம். மாநிலங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் முறை தொடர்்ந்து கட்டாயமாக அமலில் இருக்கும் என்று அறிவித்தது.
இந்தநிலையில் அக்டோபா் மாதம் 1-ந் தேதியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வெளிநகரங்களுக்கு 100 விமானங்கள் செல்லவும், வெளிநகரங்களில் இருந்து 100 விமானங்கள் சென்னை வரவும் என தினமும் 200 விமானங்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான இ-பாஸ் முறையில் தளர்வு அளிக்கப்படவில்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு நாளுக்கு 200 உள்நாட்டு விமான சேவைகள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. பயணிகள் குறைவு காரணமாக விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்க தயக்கம் காட்டுகின்றன.
இந்தநிலையில் நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிறநகரங்களுக்கு 83 விமானங்களும், பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு 83 விமானங்களும் என 166 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து வெளி நகரங்களுக்கு சென்ற விமாங்களில் 7,100 பேரும், வெளி நகரங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களில் 8,250 பேரும் பயணம் செய்தனர். இதன் மூலம் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் 166 விமான சேவைகளில் 15 ஆயிரத்து 350 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் வெளிமாநிலங்களில் இருந்து நேற்று சென்னை வந்த ஒரு சில விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.
டெல்லி விமானத்தில் 25, பெங்களூரு விமானத்தில் 26, கோழிக்கோடு விமானத்தில் 27, மங்களூரு விமானத்தில் 12, கண்ணூா் விமானத்தில் 12, ஹுப்ளி விமானத்தில் 31, ஆமதாபாத் விமானத்தில் 37, மும்பை விமானத்தில் 39, விஜயவாடா விமானத்தில் 48, புனே விமானத்தில் 48, ஜெய்ப்பூா் விமானத்தில் 59 பேர் சென்னைக்கு பயணம் செய்தனர்.
தமிழகத்தில் மாநிலங்களிடையே அமலில் உள்ள கட்டாய இ-பாஸ் முறையால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள தளர்்வுகளின் அடிப்படையில் தமிழக அரசும் இ-பாஸ் முறையில் தளர்்வுகளை அறிவித்தால் பயணிகள் எண்ணிக்கையும், உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story