பெண்களை பாதுகாக்கும் 'மிஷன் சக்தி' திட்டம் - முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்


பெண்களை பாதுகாக்கும் மிஷன் சக்தி திட்டம் - முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2020 8:36 AM GMT (Updated: 17 Oct 2020 8:36 AM GMT)

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'மிஷன் சக்தி' திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் இன்று நடந்த நவராத்திரி துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆத்தியநாத், ‘மிஷன் சக்தி’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ராஸ், பல்ராம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்த மாநில அரசு, ‘மிஷன் சக்தி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு நடனம், நாடகங்களை மாணவர்கள் நிகழ்த்தினர். நவராத்தி விழாவின் தொடக்கத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், ‘பசாந்திக் நவராத்திரி’ என்று அழைக்கப்படும் விழாவின் போது நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாத காலத்தில் பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்து அமைச்சர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாநிலத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 521 தொகுதிகள், 59,000 கிராம பஞ்சாயத்துகள், 630 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 1,535 காவல் நிலையங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த பிரச்சாரத்தில் சமூக அமைப்புகளையும், பெண்கள் குழுக்களையும் சேர்க்க வேண்டும் என்றும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை முன்மாதிரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பிரச்சாரத்தை நிறைவேற்றுவதற்கும், கண்காணிப்பதற்கும் மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story