கல்வித்துறை பயிற்சி வகுப்பில் பயின்ற அரசு பள்ளி மாணவர்கள் 1,615 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி


கல்வித்துறை பயிற்சி வகுப்பில் பயின்ற அரசு பள்ளி மாணவர்கள் 1,615 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 Oct 2020 11:30 PM GMT (Updated: 17 Oct 2020 11:05 PM GMT)

நீட் தேர்வில் கல்வித்துறை பயிற்சி வகுப்புகளில் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, 

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை 13 லட்சத்து 66 ஆயிரத்து 954 பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் 57.44 சதவீத தேர்ச்சியை பெற்றது.

நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கல்வித்துறை சார்பில் நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6,692 பேர் நீட் தேர்வை எழுதினர். இதில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற மாணவி 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்று இருக்கிறார். காஞ்சீபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளனர். 15 பேர் 400 முதல் 500 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 70 மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்களை பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், தற்போது 70 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story