இடஒதுக்கீடு விவகாரத்தில் அலட்சியம்: சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் - கி.வீரமணி கண்டனம்


இடஒதுக்கீடு விவகாரத்தில் அலட்சியம்: சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் - கி.வீரமணி கண்டனம்
x
தினத்தந்தி 18 Oct 2020 1:25 AM GMT (Updated: 18 Oct 2020 1:25 AM GMT)

இடஒதுக்கீடு ஒப்புதல் வழங்குவதில் காட்டப்படும் அலட்சியத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அமைச்சரவை, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான தனிச் சட்டம் ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இப்போது 45 நாட்களுக்கு மேலாக அது கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தமிழக அரசு வக்கீலிடம், “கவர்னரிடம் ஒரு மாதத்திற்கும் மேல் கோப்பு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பயன்பெறச் செய்ய வேண்டாமா?” என்று உருக்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது மூத்த நீதிபதி கிருபாகரன் கண்களில் நீர் வழிந்தோடியது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அந்த இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வரும் வரை இவ்வாண்டு கலந்தாய்வு நடைபெறாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அல்லல்பட்டு ஆற்றாது ஏழைகள் அழும் கண்ணீருடன் நீதிபதிகள் கண்ணீரும் இணையும் நிலை ஒருபோதும் வீணாகிவிடாது. இதில் காட்டப்படும் அலட்சியத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் கடும் விலையை அரசியல் ரீதியாக கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

Next Story