குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு
x
தினத்தந்தி 27 Oct 2020 10:22 PM GMT (Updated: 27 Oct 2020 10:22 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் நேற்று காப்பு களைந்தனர்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு கோலத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் ஊர், ஊராக சென்று காணிக்கை வசூலித்து வந்தனர். இதனால் தசரா விழா களை கட்டியிருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தசரா திருவிழாவின் முதல் நாள், 10, 11-ம் நாட்களில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. மற்ற நாட்களில் குறிப்பிட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. வழக்கமாக கடற்கரை மைதானத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி மிகவும் எளிமையாக நடந்தது.

இரவு 11.45 மணிக்கு கோவில் முன்பு செண்டை மேளம் முழங்க அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளினார். அப்போது மகிஷாசூரன் அம்மனை 3 முறை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் 11.57 மணிக்கு சூலாயுதத்தால் வதம் செய்தார். தொடர்ந்து சிங்க முகம், எருமை தலை, சேவல் என உருமாறி வந்த மகிஷாசூரனை முறையே 12.04 மணி, 12.09 மணி, 12.15 மணிக்கு அம்மன் வதம் செய்தார். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

11-ம் நாளான நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம் அம்மன் சாந்த ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் அம்மன் கோவில் வந்து சேர்ந்தார். அதன்பிறகு கொடி இறக்கப்பட்டு, அம்மனுக்கு காப்பு களையப்பட்டது. தொடர்ந்து தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் காப்பு மற்றும் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்தனர்.

விழாவின் நிறைவு நாளான இன்று (புதன்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து விரதம் இருந்து வேடம் அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோவிலில் வந்து செலுத்துகிறார்கள்.



Next Story