மழை பாதிப்பை சமாளிக்க முடியும்; மக்கள் பயப்படத் தேவையில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்


மழை பாதிப்பை சமாளிக்க முடியும்; மக்கள் பயப்படத் தேவையில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
x
தினத்தந்தி 29 Oct 2020 3:03 PM IST (Updated: 29 Oct 2020 3:03 PM IST)
t-max-icont-min-icon

மழை பாதிப்பை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் இன்று அதிகாலை விடிய விடிய பெய்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் வடமாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று சென்னையில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை பெய்து வரும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் தந்தி டி.வி.க்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;-

“சென்னையில் இன்று வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகாலை 3 மணியளவில் பெய்யத் தொடங்கியது. நகரின் பல பகுதிகளில் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு தேவயான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது நெடுஞ்சாலைதுறை மற்றும் மாநகராட்சி சார்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் மழைப்பொழிவு ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

Next Story