இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் - முதலமைச்சர் பழனிசாமி


இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 31 Oct 2020 12:16 PM IST (Updated: 31 Oct 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாட்டிலேயே மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. 

ஆண்டுதோறும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஒரு ஆய்வு அமைப்பு வெளியிட்டு வருகிறது. இதற்கு கஸ்தூரி ரங்கன் தலைவராக இருக்கிறார். இவர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஆவார். 

இந்த தரவரிசை பட்டியல் ,மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் அதன் நிர்வாக செயல் திறனை அளவிட்டு வெளியிடப்படுகிறது. இதனிடையே 2020-ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

அதில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு 1.388 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. அடுத்த இடத்தை ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு 0.531 புள்ளிகளுடனும், எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு 0.468 புள்ளிகளுடன் பிடித்துள்ளன. 

கடைசி இடங்களில் உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் மாநிலங்கள் உள்ளன. சிறந்த ஆட்சி நடைபெறும் சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடத்தை பெற்றுள்ளது. மேகலாயா, இமாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இடம் பெற்றுள்ளது. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்தையும், புதுச்சேரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story