சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
விருத்தாசலம் சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை சிபிசிஐடி தொடங்கியது.
விருதாசலம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 39). இவர் முந்திரி தொழில் செய்து வந்தார். இதற்காக நெய்வேலி வடக்குத்தில் தனது மனைவி பிரேமா(34) மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் செல்வமுருகனை கைது செய்தனர்.
பின்னர் நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வமுருகன், விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட, செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி போலீசார் அடித்து துன்புறுத்தியதில் தான் செல்வமுருகன் உயிரிழந்துள்ளார். எனவே இறப்புக்கு காரணமான போலீசாரை கைது செய்தால் தான், உடலை வாங்குவோம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக செல்வமுருகனின் உடலை பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் முன்வரவில்லை.
இதற்கிடையே விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் தான், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் அழைத்து சென்றனர். அங்கு செல்வ முருகன் சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்வமுருகனின் உடலை, நேற்று முன்தினம் விருத்தாசலம் மாஜிஸ்திரேட்டு ஆனந்த் பார்வையிட்டு, போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து, அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாஜிஸ்திரேட்டு ஆனந்த், விருத்தாசலம் கிளை சிறைக்கு நேரில் சென்று, நடந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனிடமும் அவர் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே செல்வமுருகன் இறந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில், சந்தேக மரணம் என்று கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார், செல்வமுருகன் இறந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story