மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
x
தினத்தந்தி 10 Nov 2020 7:47 PM GMT (Updated: 10 Nov 2020 7:47 PM GMT)

மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை, 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். அந்த வகையில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24 ஆயிரத்து 420 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 742 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 17 ஆயிரத்து 816 மாணவ-மாணவிகளும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 86 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 38 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியிருப்பதாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

விண்ணப்பங்களை பதிவு செய்து முறையாக அனுப்புவதற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். அதனைத் தொடர்ந்து மருத்துவக்கல்வி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. இதற்கிடையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story