மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மெரினா கடற்கரையில் நவம்பர் இறுதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன. இருப்பினும் தற்போதுவரை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கான தடை நீக்கப்படவில்லை.
பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், தியேட்டர்களை திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. அது போல் கட்டுப்பாடுகளுடன் மெரினா கடற்கரையையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பல்வேறு தர்ப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் இறுதி வரையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் திறக்கப்பட்டு விட்ட நிலையில் கடற்கரையை திறக்க தாமதம் காட்டுவது ஏன்? என்றும் அதில் என்ன சிரமம்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே மக்களுக்கு அனுமதி வழங்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story