மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 11 Nov 2020 2:20 PM IST (Updated: 11 Nov 2020 2:20 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, நேரடி கவுன்சிலிங் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க.வின் தொடர் போராட்டத்தினால், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 7.5 விழுக்காடு முன்னுரிமை இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதற்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு,  “நேரடி கவுன்சிலிங்” என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குப்  பலவகை இன்னல்களை ஏற்படுத்தும். மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கொரோனா சோதனை நடத்துவதும், கூட்டத்தைக் குறைக்கும் வகையில் நீண்ட நாட்கள் கலந்தாய்வினை நடத்துவதும், நடைமுறை சாத்தியமா என்பதை அரசு அதிகாரிகளோ- வெற்றுச் சவடால் அமைச்சர், குட்கா மற்றும் கொரோனா புகழ்  திரு. விஜயபாஸ்கரோ -  ஏன் முதலமைச்சரோ கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

தற்போது தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. அதோடு, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்.பி.பி.எஸ். இடங்களும், 690 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன என்பதால்; இந்தக் கலந்தாய்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்த்தபடி பயனளிக்கும் வகையில்- எவ்விதத் தவறுகளுக்கும் சிறிதும் இடமளிக்காமல் நடத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

கடந்த ஆண்டு கலந்தாய்வு என்பது, “முறைகேடுகளின் சொர்க்கமாக” அமைந்திருந்ததை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்கள், தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றதாகப் புகார் எழுந்தது. நீட் தேர்வில் 18 பேர் ஆள் மாறாட்டம் செய்ததாக, சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அவர்களில் பலரை ஆதார் முகவரியை வைத்துக்கூட சி.பி.சி.பி.ஐ.டி. போலீஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை. “எங்களிடம் அவர்களின் தகவல்கள் இல்லை” என்று ஆதார் முகமையும் கைவிரித்து விட்டது. ‘என்.ஆர்.ஐ. கோட்டாவில்’ மருத்துவ மாணவர் சேர்க்கையிலும் ஆள்மாறாட்டம்- முறைகேடுகள்- சீட்டுகள் விற்பனை- எனக் கடந்த ஆண்டு கலந்தாய்வு,  அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளின் மொத்தப் புகலிடமாகக் கடந்து சென்று விட்டது.

இவ்வளவு முறைகேடுகளுக்கும் ஏதோ மாணவர்களும்- பெற்றோரும் மட்டுமே காரணம் என்பதைப் போல் பழி சுமத்தி- பெயரளவிற்கு ஒரு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு- அதையும் முடிவுக்குக் கொண்டு வராமல், முதலமைச்சர் திரு. பழனிசாமியும், அமைச்சர் திரு. விஜயபாஸ்கரும் “இதுவரை” காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தாக்குதல் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில்- இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி கவுன்சிலிங் நடத்துவது மிகவும் ஆபத்தானது.

மாணவர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியம். அதே போல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையும் மிகவும் முக்கியம். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம்- மத்திய- மாநில அரசுகளுக்கு தீவிர அழுத்தம் கொடுத்துப் பெற்றுக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மொத்த மருத்துவ சேர்க்கையையும் “ஆன்லைன் கவுன்சிலிங்”  மூலமே நடத்திட வேண்டும் எனவும் - கடந்த ஆண்டு நடந்ததைப் போல், எவ்வித முறைகேடுகளின் அணிவகுப்பினையும் நடத்தி விடாமல் -  வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்  எவ்விதச் சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல்  மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார். 


Next Story