சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குவது போல் முதலமைச்சர் பழனிசாமி பேசியிருக்கிறார் - மு.க.ஸ்டாலின் கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குவது போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிகார துஷ்பிரயோகம் செய்து, பெருமளவு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவது தொடர் பான ஊழல் வழக்கிற்காக, ஐகோர்ட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் ஒரே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் வழக்கு வேறு விதமாக அமைந்தால் மு.க. ஸ்டாலின் 6 வருடம் தேர்தலில் நிற்க முடியாது” என்று பேசி, எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விரக்தி விளிம்பின் ஓரத்திற்கே சென்றுவிட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் சில மாதங்கள் கழித்து, தனது ஊழல்கள் கோப்புகளுடனான சான்றுகளுடன், வெளிச்சத்திற்கு வரும் என்று எண்ணி எண்ணி நடுங்கிக் கொண்டிருக்கிறார். லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில், மூட்டை கட்டி ஒரு மூலையில் முடக்கிவைக்கப்பட்டுள்ள, ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேலான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிடும் என்று அல்லும் பகலும் அஞ்சுகிறார்.
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஒரு மேல்முறையீடு பற்றி “தீர்ப்பு வழங்குவது” போல் பேசியிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தீர்ப்பு எப்படி வரவேண்டும் என்ற ஆணவம் இந்தப் பேச்சில் எதிரொலிக்கிறது. முதல்-அமைச்சருக்கு இந்த ஆணவத்தைக் கொடுத்தது எது?. அடித்துக் குவித்துச் சேமிப்புக் கிடங்கில் அடைத்து வைத்துள்ள ஊழல் பணமா என்ற கேள்வி எழுகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை, வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து உண்மைகளை நீதிமன்றத்தில் எடுத்துவைத்து வெற்றி பெற்று வரும் இயக்கம். அப்படித்தான் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான “குட்கா உரிமை மீறல் நோட்டீஸ்” உள்பட பல வழக்குகளையும் தி.மு.க. எதிர்கொண்டு வருகிறது. சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே பொய் வழக்குகள் - ஆதாரமில்லாத வழக்குகளைச் சட்ட ரீதியாகத் தி.மு.க. சந்திக்கும்.
எங்களைப் பொறுத்தமட்டில், இப்போது ஊழல் பெருச்சாளிகளின் சங்கமமாக இருக் கும் அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கியெறிந்து, தமிழகத்தைக் கொடுங்கோலர்களிடம் இருந்து மீட்க வேண்டும்; தமிழ் மக்களைப் பாதுகாக்கவேண்டும்; தமிழகத்தின் வளர்ச்சியை, 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய மோசடிப் பேர்வழிகளின் முகத்திரையை பொது வெளியில் கிழித்தெறிய வேண்டும்; இதுதான் எங்கள் இலக்கு.
அந்த இலக்கை அடைய நாங்கள் தமிழக மக்களை நாள்தோறும் நாடுகிறோம். மக்களுக்காகப் பாடுபட இயன்றதனைத்தையும் செய்கிறோம். மே மாதத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது சகாக்களும் இருக்க வேண்டிய இடம் எது என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story