வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர் - தீயணைப்புத்துறை இயக்குனர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார்நிலையில் உள்ளனர் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் எம்.எஸ்.ஜாபர் சேட் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இதுதொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் எம்.எஸ்.ஜாபர் சேட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார்நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தீக்கட்டுப்பாட்டறை அமைக்கப்பெற்று 24 மணி நேரமும் கூடுதல் பணியாளர்கள் தொடர் பணியில் உள்ளனர்.
மழைவெள்ளத்தினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல மோட்டார் படகுகள், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட நீச்சல் வீரர்கள், லைப்பாய், லைப் ஜாக்கெட், கயிறுகள் போன்ற அவசரகால மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
மழையினால் தண்ணீர் சூழ்ந்த இடங்களில் இருந்து தண்ணீரை அகற்றிட தேவையான பம்புகளுடன் பணியாளர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் கூடுதல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழை மற்றும் புயலினால் சாலைகளில் விழும் மரங்களை அகற்றிட மின் ரம்பங்களுடன் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். அவசர காலங்களில் உதவுவதற்கு என்று தீயணைப்புத்துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 620 தீயணைப்பு தன்னார்வ தொண்டர்கள் அவசர காலங்களில் உதவுவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் வேளையில், அந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. அந்த சூழலை திறம்பட எதிர்கொள்ள தீயணைப்புத்துறையின் நீச்சல் வீரர்களை கொண்ட கமாண் டோ குழுவினர் ரப்பர் படகுகள், கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தாம்பரம் மற்றும் எழும்பூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையங்களில் தயார்நிலையில் உள்ளனர்.
அன்றாடம் வானிலை நிலவரம் அறியப்பட்டு, அதற்கேற்றவாறு மீட்பு பணிகள் திட்டமிடப்படுகிறது. சென்னையை பொறுத்தவரையில் மழையினால் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள் தீக்கட்டுப்பாட்டறையின் 101 மற்றும் 9445086080 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். உடனடியாக அருகில் உள்ள மீட்பு குழுவினர் பொதுமக்களை மீட்க அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story