“மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு வஞ்சகம்” - திருமாவளவன் குற்றச்சாட்டு
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் இடம்பெற்றிருப்பது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியடப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டியலில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் இடம்பெற்றிருப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம் பெற்றிருக்கிறார்களா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
வெளி மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய எம்.பி.பி.எஸ். இடங்களைப் பிற மாநில மாணவர்களுக்கு ஏன் தாரை வார்த்துத் தரவேண்டும்? ஏற்கனவே மத்திய தொகுப்புக்கு 15% இடங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு மிச்சமிருப்பதிலும் பிற மாநில மாணவர்களைச் சேர அனுமதிப்பது நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வஞ்சகம் செய்வதாகாதா?
மருத்துவப் படிப்பு சேர்க்கையில் எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடக்காமல் தடுப்பதற்கு குடியிருப்புச் சான்றிதழ் கேட்பது மட்டுமின்றி, 6 ஆம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை தமிழ் நாட்டில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் எனத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 18, 2020
தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!#medicaladmissionspic.twitter.com/Sk6YCDLIZO
Related Tags :
Next Story