தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2020 7:30 PM GMT (Updated: 2020-11-30T18:42:44+05:30)

தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.


சென்னை, 

தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்துக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் தொடங்க அனுமதி அளிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க இதுவரை 10 முறை ஊரடங்கு உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டன. 10-வது ஊரடங்கு உத்தரவு நவம்பர் 30-ந் தேதியுடன் (நேற்றுடன்) முடிவடைந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று, 11-வது ஊரடங்குஉத்தரவை பல்வேறு தளர்வுகளுடன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25-ந் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.தற்போது நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 30-ந் தேதிவரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்குஉத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்கள்,மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்களுடன் நான் கலந்தாலோசனை செய்தேன்.தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றைதடுப்பதற்காகவும், தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, பல்வேறுகட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் இம்மாதம் (டிசம்பர்) 31-ந் தேதிநள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், தொற்றின்தன்மையை கருதியும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பிட்டபணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப,பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் இம்மாதம் 7-ந் தேதிமுதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்படலாம். மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை வகுப்புகள்) 7-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும்,
அவர்களுக்கான விடுதிகளும் செயல்படலாம்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14-ந் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி  அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு
மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1-ந் தேதி (இன்று) முதல் 31-ந் தேதிவரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும். வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இபதிவு முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளவுர்களுக்கு தனித்தனியே வெளியிடப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், கொரோனா தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே தொடர்ந்து முழு ஒத்துழைப்பு தாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story