“சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும்” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


“சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும்” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 1 Dec 2020 12:53 PM GMT (Updated: 1 Dec 2020 12:53 PM GMT)

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

இட‌ஒதுக்கீடு கோரி பா.ம.க. போராட்டம் நடத்திவரும் நிலையில், பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதியம் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத  இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கயில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆணையம்  அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பை பெற்றுத் தந்து, சமூக நீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்து பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. 

எனவே தமிழகம் முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெறும் என்ற காரணத்தால், சாதி வாரியான தற்போதைய புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும். 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சமூக நீதியை காப்பதில் எந்த அளவு உறுதியாக இருந்தார் என்பதை நாடு அறியும். அவரது வழியில் செயல்படும் இந்த அரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story