புரெவி புயல் எதிரொலி; சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து
புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று பாம்பனுக்கு கிழக்கு-தென் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story