புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு


புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2020 7:29 PM IST (Updated: 3 Dec 2020 7:29 PM IST)
t-max-icont-min-icon

புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திரிகோணமலையில் கரையை கடந்து, இன்று மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் உள்புற மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனையடுத்து புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகள் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீனவ கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story