மத்திய அரசு தமிழ் மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின்


மத்திய அரசு தமிழ் மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Dec 2020 8:34 PM IST (Updated: 4 Dec 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு தமிழ் மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட உத்தரவிட்டு, அதனை மைசூரில் உள்ள ‘பிபிவி’ பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா’ என்ற மத்தியப் பல்கலைக்கழகமாகப் பெயர் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை’ இணைத்திட எடுக்கப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் முடிவிற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் - பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும் - இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது. 

தமிழ்மொழி மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்து, ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் “துறை” என்ற அளவில் சுருக்கி, சிறுமைப்படுத்தும் உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது. 

ஆகவே செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட்டிட உத்தரவிட்டு, இந்த நிறுவனத்தை, மைசூரில் உள்ள ‘பிபிவி’ பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிற்போக்குத்தனமான முடிவினைக் கைவிட வேண்டும். 

செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் முடிவை ஆமோதிக்காமல், முதலமைச்சர் பழனிசாமி உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசின் இந்த முடிவினைக் கைவிட உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story