சென்னையிலேயே செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


சென்னையிலேயே செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2020 1:57 AM IST (Updated: 5 Dec 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னையிலேயே செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969-ல் தொடங்கப்பட்ட இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் தற்போது மத்திய பல்கலைக்கழகமாக மாற்றப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் பெயர் ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா’ என்று மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய செம்மொழிகளுக்கு மத்திய மொழி ஆய்வு நிறுவனங்கள் எதுவும் இல்லை.

தற்போது இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் ‘பி.பி.வி.’ என்று பெயர் மாற்றப்பட்டு, அதனுடன் சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது என்ற நடவடிக்கையால் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வு பணிகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுவிடும். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இத்திட்டத்தை முதல்-அமைச்சர் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story