மின்சார ரெயில் சேவை 7-ந் தேதி முதல் 320 ஆக அதிகரிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பெண் பயணிகளின் பயண நேரத்தை அதிகரிக்க மின்சார ரெயில் சேவை 7-ந் தேதி முதல் 320 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி-கடற்கரை உள்ளிட்ட வழித்தடங்களில் 244 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரெயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் மின்சார ரெயிலில் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதித்தது. அந்த வகையில் கூட்ட நெரிசல் இல்லாத சாதாரண நேரங்களில் (காலை 7 மணிக்கு முன்பாகவும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 7.30 மணிக்கு பிறகும்) மட்டுமே அத்தியாவசிய பணியாளர்கள் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது புதிய காலவரைவு மாற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பயணியாளர்கள் பட்டியலில் வராத பெண் பயணிகள், கூடுதல் நேரங்களில் மின்சார ரெயில்களில் பயணிக்க, ஏதுவாக மின்சார ரெயில் சேவை 320 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு அறிவிக்கப்பட்டிருந்த பயண நேரப்படியே தற்போதும், அத்தியாவசிய பட்டியலில் வராத பெண் பயணிகள் மின்சார ரெயிலில் பயணிக்க முடியும்.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story