புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக அரசு தலைமை செயலகத்தில் இன்று காலை புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்தும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புயல் மற்றும் கனமழை காரணமாக 37 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 4 எருதுகள், 22 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள், 419 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாகவும் அதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பின்வருமாறு;-
* சென்னை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் நியமனம்
* கடலூர் - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்
* திருவாரூர் - உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
* நாகப்பட்டினம் - நகராட்சி நிர்வாதத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
* செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story