சென்னை: கடலில் தத்தளித்த மகளை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் பலி


சென்னை: கடலில் தத்தளித்த மகளை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2020 2:10 AM IST (Updated: 8 Dec 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவான்மியூரில், கடலில் தத்தளித்த மகளை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.

சென்னை, 

சென்னை அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாலாஜி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தனது மகள் குப்தா ரேவதியுடன் (வயது 11) நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தார். அலை சறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததால், குப்தா ரேவதி கடலில் அலை சறுக்கு விளையாட தொடங்கினாள். புயல் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து சென்னையில் கடல் அலையின் சீற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடலில் விளையாடி கொண்டிருந்த குப்தா ரேவதி, திடீரென வந்த ராட்சத அலையால், தடுமாறி விழுந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டாள். இதை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி, பதறிப்போய் உடனடியாக மகளை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் இறங்கினார். அப்போது துரதிருஷ்டவசமாக அவரும் ராட்சத அலையில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து இருவரும் உதவிக்காக அபயக்குரல் எழுப்பினர்.

இதைக்கண்டு அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் சிறுமி குப்தா ரேவதியை மட்டுமே மீட்க முடிந்தது. கடல் அலையில் சிக்கி தந்தை தத்தளித்ததை கண்ட மகள் குப்தா ரேவதி கதறி அழுதார். சிறுமிக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறினர்.

இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அங்கு வந்த திருவான்மியூர் போலீசார், அலையில் சிக்கிய பாலாஜியை மீட்க தீவிரமாக ஈடுபட்டனர். இருந்தபோதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மதியம் திருவான்மியூர் கடல் பகுதியில் பாலாஜியின் உடல் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

Next Story