விவசாயிகளின் போராட்டம்: 9-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
விவசாயிகளின் போராட்டம் குறித்து 9-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. மத்திய அரசு விவசாயப் பிரதிநிதிகளோடு ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
இதன் அடிப்படையிலே விவசாய சங்கங்கள் இன்று, டிசம்பர் 8-ம் தேதி 'பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்தியிலே ஆளுங்கட்சியை எதிர்க்கின்ற வகையிலே, பல எதிர்க்கட்சிகள் அரசியல் உள் நோக்கத்தோடு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன. அடிப்படையில் நம்முடைய நாடு விவசாயம் சார்ந்த நாடு. மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.
இருப்பினும், இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநில விவசாயிகளுக்கு இந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் விவசாய வழிமுறைகளுக்குத் தடங்கலாகக் கருதியதால் அவர்களுக்குச் சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மற்ற மாநில விவசாயிகளுக்கு அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே, மத்திய அரசு 9-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அச்சத்தைப் போக்கி, மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story