விவசாயிகள் போராட்டம்: சென்னையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு இல்லை - கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
போலீசாரின் முழுமையான பாதுகாப்பு பணி காரணமாக சென்னையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 24 இடங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களும் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. சென்னையில் முழு அடைப்பு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், “ முழு அடைப்பையொட்டி சென்னையில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். ரோந்து பணிகளிலும் போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்தனர். போலீசாரின் முழுமையான பாதுகாப்பு பணி காரணமாக சென்னையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எந்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறாமல் போராட்டங்கள் முடித்து வைக்கப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறும் இல்லை. அந்த வகையில் சென்னை முழுக்க முழுமையான பாதுகாப்பை போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.
மேலும் சமீபத்தில் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து இருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு காலத்தை ஒப்பிடுகையில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story