கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனே வாங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனே வாங்க வேண்டும்:  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2020 2:29 PM GMT (Updated: 11 Dec 2020 2:29 PM GMT)

மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனே வாங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூட்டை நெல் முளைத்துவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலிலேயே முளைக்க தொடங்கிவிட்டன. விவசாயிகளுக்கு நடப்பாண்டு லாபம் தரும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, முளைவிட்ட நெல் மூட்டைகளில் பாதிக்கப்படாமல் உள்ள நெல்லை பிரித்தெடுத்து, அவற்றை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். முளைவிட்டு சேதமடைந்த நெல்லை கணக்கிட்டு அதற்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story