விவசாயிகள் போராட்டத்துக்கு ‘மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை தர வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்


விவசாயிகள் போராட்டத்துக்கு ‘மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை தர வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Dec 2020 3:19 AM IST (Updated: 16 Dec 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டம் மக்களுக்காக, மண்ணுக்காக நடத்தும் போராட்டம் என்றும், அதற்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை தர வேண்டும் என்றும் திண்டுக்கல் காணொலி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 11-ந்தேதி மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி பாரதியாரை புகழ்ந்து பேசினார். பாரதியின் பாடல்களை சொன்னார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் வரியை பிரதமர் சொன்னார். அதன் முழு பொருளையும் பிரதமர் அவர்கள் உணர்ந்து தான் மேற்கோள் காட்டினாரா என்று கேட்க விரும்புகிறேன்.

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த உலகத்தை அழித்துவிடுவோம் என்று கோபப்பட்டார் தமிழ்க்கவி பாரதியார். ஆனால் இன்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும், வேளாண்மையை அழிக் கும் சட்டங்களாக, வறுமையை உருவாக்கும் சட்டங்களாகத் தான் இருக்கப்போகின்றன என்பதை லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிக்கு வந்து சொல்லிக்கொண்டு இருப்பது பிரதமர் காதில் விழவில்லையா என்று கேட்க விரும்புகிறேன்.

விவசாயிகள் போராட்டத்தால் இந்தியாவே பற்றி எரிகிறது. உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைந்து கிடக்கிறது. தலைநகர் டெல்லியே 20 நாட்களாக நடுங்கிக்கொண்டு இருக்கிறது.

உயிர் கொடுக்கும் உழவர் உயிர், விலை பேசி விற்கப்படும் வகையில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 3 சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரால் அவர்களை வரவழைத்து, இந்தச் சட்டம் நல்ல சட்டம்தான் என்று மத்திய அரசு வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதாவது போராடுபவர்களோடு நாங்கள் பேசுகிறோம் என்ற நாடகத்தை நடத்துகிறது.

இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசும் பிரதமர், அதனை விவசாயிகளைச் சந்தித்து சொல்ல முடியாதா? போராடும் விவசாயிகளை உள்துறை மந்திரி இன்னும் சந்திக்க முன்வராதது ஏன்? உலகத்தின் கவனத்தையே ஈர்த்துவிட்ட விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கத் தவறியது ஏன்?

இதற்காகத்தான் வருகிற 18-ந்தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் அறிவித்துள்ளோம். விவசாயிகள் நடத்தும் போராட்டம் என்பது தனிப்பட்ட அவர்களுக்காக அல்ல. மக்களுக்காக, மண்ணுக்காக நடக்கும் போராட்டம். அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தார்மீக ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயியாக, ஏழைத்தாயின் மகனாக நடித்து நாட்டு மக்களை ஏய்க்கும் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தேர்தல் தான் இந்தச் சட்டமன்றத் தேர்தல். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தென்னாட்டு மாவீரர்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்ட ஊர், இந்த திண்டுக்கல்.

சிவகங்கையில் இருந்து பெரியமருதுவும், சின்னமருதுவும், வீரமங்கை வேலுநாச்சியாரும், மைசூரில் இருந்து ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், கோபாலநாயக்கரும் இந்த திண்டுக்கல் மண்ணில் ஓரணியாக ஒன்று சேர்ந்து போர் தொடங்கினார்கள். அதனால்தான் ‘தென்னகத்தின் குருசேத்திரம்’ என்று திண்டுக்கல் வர்ணிக்கப்பட்டது.

தென்னகத்தின் குருச்சேத்திரம் என்று வர்ணிக்கப்படும் திண்டுக்கல் மாவட்டமானது, தமிழகத்தை மீட்கும் யுத்தத்துக்கு அசைக்க முடியாத களம் ஆகட்டும். தி.மு.க. வெற்றி பெறட்டும். கோட்டையை மீட்போம். தமிழகம் மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story