மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் இணைய தயார் - கமல்ஹாசன் பேட்டி


மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் இணைய தயார் -  கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2020 6:13 AM IST (Updated: 16 Dec 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

கோவில்பட்டி:

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 13-ந் தேதி மதுரையில் தொடங்கினார்.

தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், கோவில்பட்டியில் தொழில்முனைவோர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

நாம் செயலில் இறங்கவேண்டிய நேரம் இது. அலிபாபா 40 திருடர்கள் போல் 234 பேர் மக்களுக்கு சேவை செய்பவர்களை செய்யவிடமால் தடுக்கின்றனர். மக்கள் சரியாக திட்டமிட்டு சரியான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் சரியான முடிவு எடுத்தால் தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

‘ஏ’ அணி

எங்கள் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும்போது, மக்கள் கோரிக்கை குறித்து மக்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வர்கள். அதில் நான் சாட்சி கையெழுத்து போடுவேன். மக்கள் கோரிக்கையை எங்கள் சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்றவில்லை என்றால், தனது பதவியை ராஜினாமா செய்வார்.

அரசியலில் நேர்மையாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அதற்கு வழிவிட வேண்டும். நான் ஒரு ‘ஏ’ அணியை உருவாக்கி கொண்டு இருக்கிறேன். நாங்கள் மக்களை தேடி செல்வோம். ஊழல் என்ற உயிர்நாடியை அடிப்போம். மேலே அடித்தால் கீழே சரியாகும். மக்களின் பேச்சைக் கேட்டுதான் எங்கள் ஆட்சி நடக்கும்.

பெண்களுக்கு சம பங்கு

எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு சம பங்கு உண்டு. கட்சி ஆரம்பித்து வேடிக்கைபார்க்க வரவில்லை. நீங்கள் அனுமதி தந்தால் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைப்போம். ஊழல் இல்லாத ஆட்சியை நான் நடத்திக் காட்டுவேன். ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களிடம் ரூ.5 லட்சம் கேளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினியுடன்...

தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். எப்போதும் மக்கள் திலகம்தான். அவர் ஏழரை கோடி மக்களுக்கு சொந்தம். அதில் நானும் ஒருவன். எனது கட்சி சின்னத்துக்கு எதிராக யார் தூண்டிவிடுகிறார்கள், யார் செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து என் விஸ்வரூபம் இருக்கும்.

எனது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவரது கொள்கை குறித்து இனிதான் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக, மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து கமல்ஹாசன் எட்டயபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திறந்த வேனில் நின்றபடி மக்களிடம் பேசினார். பின்னர், பாரதியார் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

Next Story