50 சதவீதம் பேருடன் திறந்த வெளியில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
திறந்த வெளியில் 50 சதவீதம் பேர் பங்கேற்கும் வகையில், அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, மதம் சார்ந்த கூட்டங்களை நாளை மறுநாள் (சனிக் கிழமை) முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இப்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதன்காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வந்த போதிலும் திறந்த வெளியில் பொதுமக்கள் திரளாக கூடுவதற்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த கட்டுப்பாடும் நாளை மறுநாள் முதல் தளர்த்தப்படுகிறது.
திறந்த வெளியில் 50 சதவீதம் பேர் பங்கேற்று, அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, மதம் சார்ந்த கூட்டங்களை 19-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் நடத்தலாம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும்தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப (மொத்த கொள்ளளவு) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீத அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை 19-ந் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால்தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story