கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து 21ந்தேதி ஆர்ப்பாட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் 21ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் 21ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100, மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்திவருவதும், இந்திய குடும்பங்களின் குடும்ப வரவு செலவு கணக்கில் கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று இதயத்தில் ஈரமில்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்து கொண்டே இருப்பது மனித நேயமற்றது மட்டுமின்றி, நாட்டு மக்களின் வாழ்க்கை பின்புலம் அறியாத அலட்சியமும் ஆகும். கடந்த மே மாதத்தில் இருந்து 5 முறை கியாஸ் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு இப்போது 15 நாள் இடைவெளியில் ரூ.50 என இருமுறை உயர்த்தி ஒரு கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.710 ஆக அதிகரித்திருப்பது தாய்மார்களை நிலைகுலைய வைத்துள்ளது.
கொரோனா காலத்தில் கிடைக்கின்ற சொற்ப வருவாயைக்கொண்டு, சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டிய கடுமையான கட்டாயத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு, இந்த விலை உயர்வு தாங்கமுடியாத பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாமே மத்திய பா.ஜ.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது. அதை தடுத்து, தாய்மார்களை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ள ஆட்சியாளர்கள், அதை மறந்து, கண்ணை மூடிக்கொண்டு அடுத்த கட்டமாக எவ்வளவு விலை உயர்த்தலாம் என்று சர்வாதிகார ஆணவத்துடன் யோசித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள ரூ.100 கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும்; இந்த விலை உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும்; மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, வருகிற 21ந்தேதி மாலை 3.30 மணியளவில், தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் உள்ள மகளிரணியினரின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் அறவழியில், நடைபெறும்.
அந்தந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டு கட்சி சார்பற்ற முறையில் அனைத்து தரப்பு மகளிரையும் ஒன்று திரட்டி, இந்த பெருந்திரள் மகளிர் ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி போராட்டமாக நடத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக தாய்மார்கள் எழுப்பும் முழக்கம் தலைநகர் டெல்லிக்கு எட்டட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.