தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அரியலூர்,
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் மற்றும் ரூ.26 கோடியே 52 லட்சத்தில் 6 துறைகளைச் சேர்ந்த 14 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பயனாளிகளுக்கு ரூ.129 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், மருத்துவ வல்லுனர் குழுவினர் கொடுத்த அறிவுரைகளை அப்படியே நடைமுறைப்படுத்தியது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தந்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கூறிவருகிறார். என்ன நடக்கவில்லை என்று எங்களுக்கு தெரியவில்லை. எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
முன்மாதிரி மாநிலம்
இந்தியா முழுவதும் இருக்கிற முதல்-அமைச்சர்கள் பங்கேற்ற பிரதமர் நடத்திய மாநாடு காணொலி மூலம் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் தமிழ்நாடு அரசு சரியான முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்த முயற்சிகளின் காரணமாகவே அங்கு வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே அதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமல்ல சிறப்பான முயற்சிகள் எடுத்த தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டார். ஆக கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பாரதப்பிரதமரின் பாராட்டை பெற்றது நமது அரசுதான். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதும் தமிழ்நாடு அரசுதான்.
இவ்வாறு கூறினார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: சென்னை ஐ.ஐ.டி. அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என உயர் கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆகவே இதனை விரைவாக கட்டுப்படுத்த ஏதாவது சிறப்புத் திட்டம் செயல்படுத்துமா?
பதில்: அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் தான் அந்த நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
கேள்வி: அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு வருகிறார் கள். இதுகுறித்து கமல்ஹாசன் அரசு எவ்வழியோ அவ்வழியேதான் அதிகாரிகளும் செயல் படுவதையே இதுகாட்டுகிறது என்று கூறியுள்ளாரே?
பதில்: அரசாங்கம்தான் லஞ்சஒழிப்பு கைது நடவடிக்கையை நடத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் யார்மீது வருகிறது. அப்படியென்றால் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றுதானே அர்த்தம். எங்கேயும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அவர் (கமல்ஹாசன்) புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு என்ன தெரியும். சினிமாவில் ஓய்வு பெற்றவர்.. அவருக்கு 70 வயதாகிறது. இந்த வயதில் டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கிறார்.
டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும். அவர் நடத்தும் டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் கூட நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தலைவன் சொல்லக்கூடிய கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தை கெடுப்பதுதான் அவரது வேலை. அதைப்பார்த்தால் நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போய்விடும்.
எம்.ஜி.ஆர். இருக்கும்போது பாடல்கள் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துகளை கூறினார். கமலஹாசன் ஒருபடத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறியிருக்கிறாரா. நன்மை செய்யக்கூடிய பாடல்களை பாடியிருக்கிறாரா. எனவே அவர் சொல்லக்கூடிய கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story