வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் உண்ணாவிரதத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
சென்னை:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, புதுச்சேரியில் திமுக, தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்றும், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், எம்.பி., எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள் என்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுத்தாலும் தடையைமீறி உண்ணாவிரதப் போராட்டம்நடத்தவும், கைது செய்யப்பட்டாலும் உண்ணாவிரதத்தை தொடரவும் திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது . திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக, தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய மு.க.ஸ்டலின் கூறும் போது வேளாண் சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்பு விவசாய சங்கங்களுடன் பேசி இருக்க வேண்டும்.விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.
கொரோனா காலத்தை சாதகமாக பயன்படுத்தி அவசர, அவசரமாக சட்டங்கள் இயற்றப்படுகின்றன. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மாநகரமே கொதித்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக போராட்ட களத்தில் குவிந்து வருகின்றனர். யாரை பாதுகாக்க இந்த வேளாண் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? போராட்டம் நடத்தி வருபவர்களை மத்திய அரசு தேச விரோதிகள் என்று கூறி வருகிறது. என கூறினார்.
Related Tags :
Next Story