இந்திய பொருளாதார பலவீனத்தை சீனா பயன்படுத்த நினைக்கிறது - நெசவாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி பேச்சு


இந்திய பொருளாதார பலவீனத்தை சீனா பயன்படுத்த நினைக்கிறது - நெசவாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 24 Jan 2021 11:15 PM GMT (Updated: 24 Jan 2021 9:49 PM GMT)

இந்திய பொருளாதார பலவீனத்தை சீனா பயன்படுத்த நினைக்கிறது என்று நெசவாளர்களுடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி பேசினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தலைமையில் “ஒரு கை பார்ப்போம்” என்ற தலைப்பில் நெசவாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராகுல்காந்தி, நெசவாளர்கள் தரப்பில் சில பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டு தெரிந்து அவர்களுக்கு பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்ப்பதில்லை. அவர்களை சாதாரண தொழிலாளர்களாக பார்க்கிறார்கள். நாட்டின் வரலாற்றில் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்துபவர்கள் நீங்கள்தான். உங்கள் உறுதியான வளர்ச்சிதான் நாட்டையும் வளர்ச்சி அடைய செய்யும்.

இந்தியாவில் நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கடின உழைப்பாளிகள். நாடு அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறது. இங்கே நான் ஒன்றை உங்களிடம் கூற விரும்புகிறேன். எந்த ஒரு விவசாயி, எந்த ஒரு நெசவாளர், எந்த ஒரு தொழிலாளியும் நமது நாட்டை அன்னியரிடம் விற்பனை செய்வதில்லை. யார் நமது இந்தியாவை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

நான் உங்களிடம் எதுவும் சொல்ல வரவில்லை. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் கூறும் கருத்துகளை கேட்க வந்திருக்கிறேன். நமது எண்ணங்கள் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்ற பெரும் நம்பிக்கை என்னிடம் உள்ளது.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். பின்னர் நெசவாளர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

வேலுச்சாமி: இந்தியாவில் 25 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் சுமார் 7 லட்சம் விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன. நேரடியாக 10 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 15 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால், சமீப காலமாக அதிநவீன தறிகள் மூலம் பெரிய நிறுவனங்கள் அதிக உற்பத்தி செய்வதால், விசைத்தறிகள் பாதிப்பு அடைகின்றன.

இதுபோல் கைத்தறிகளுக்கு பாதிப்பு வந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சில ரகங்களை கைத்தறிக்கு ஒதுக்கினார். இதன் மூலம் கைத்தறி தொழில் அழியாமல் பாதுகாக்கப்பட்டது. இதுபோல் தற்போதைய நிலையில் விசைத்தறிக்கு குறிப்பிட்ட ரகங்களை ஒதுக்கித்தர வேண்டும்.

பாலசுப்பிரமணியம்: விஸ்கோஸ் ரேயான் துணிகள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு ரேயான் நூல் ஒரே ஒரு தனியார் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நூல் விலை நிர்ணயம் என்பது மாதத்துக்கு ஒருமுறை செய்யப்பட்டது. தற்போது ஒரு நாளில் 2 முறை நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்துவதுடன், தொழில் நசியும் அபாயமும் உள்ளது. இதில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

கந்தவேல்: புதிய மின்சார திட்டமான உதய் அமலுக்கு வந்தால் தமிழக அரசு நெசவாளர்களுக்கு கொடுத்து உள்ள 750 யூனிட் இலவச மின்சாரம் இல்லாமல் போகும். மின்சாரம் தனியார் மயமாக்கப்பட்டு, உபயோகிக்கப்போகும் மின்சாரத்துக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும்போது எங்களுக்கு தேவையான மின்சாரத்தை பயன்படுத்த முடியாது. ஒரு வேளை உதய் திட்டம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் மின்சார கட்டணம் அனைத்து விசைத்தறிகளுக்கும் ஒரே விதமான கட்டண விகிதம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து ராகுல்காந்தி பேசியதாவது:-

நெசவாளர்களின் இந்த கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் நான் குரல் கொடுப்பேன். உங்கள் குரலாக நானும், தமிழகத்தில் இருந்து நீங்கள் தேர்ந்து எடுத்து அனுப்பிய 38 எம்.பி.க்களும் இருப்போம். நமது நாட்டின் தற்போதைய நிலையை நாம் சற்று உற்று நோக்கினால், சீனப்படைகள் நமது எல்லைப்பகுதியில் ஊடுருவி நமது பிரதேச பகுதிகளில் வந்து உள்ளன. ஒரு பக்கம் அண்டை நாடான வங்காளதேசம் ஜவுளி உற்பத்தியில் நம்மை விட முன்னணியில் இருக்கிறது. நான் சீனப்படைகள் குறித்து பேசும்போது, நீங்கள் இப்படி சிந்தித்து இருப்பீர்கள்.

நெசவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் ஏன் இப்படி சீனா குறித்து பேசுகிறார் என்று. ஆனால் நான் பேசுவதற்கான காரணம் இருக்கிறது. இன்று நமது நாடு பொருளாதாரத்தில் பலவீனமான நாடாக இருக்கிறது. நீங்களே சிந்தித்து பாருங்கள். கடந்த 3 அல்லது 4 மாதங்களில் சீனாவைப்பற்றி நமது பிரதமர் மோடி ஏதேனும் வாய்திறந்து பேசி இருக்கிறாரா. இந்தியாவில் இப்போது பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இங்கு 5 அல்லது 6 பேருக்காக மட்டுமே அரசு நடக்கிறது.

தொழிலாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், பணியாளர்கள் என்று யாருக்கும் பாதுகாப்பற்ற ஒரு அரசாக இந்திய அரசு உள்ளது. இந்த நேரம் சரியானது என்று சீனா நினைக்கிறது. நமது நாட்டை காக்க, ராணுவம், விமானப்படை, கப்பல்படைகளின் வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். அதே நேரம் நாம் எல்லோரும் நமது நாட்டை காக்கும் வீரர்களாக இருக்கிறோம். நமக்கு அந்த மன தைரியம் உள்ளது. மிகப்பெரிய படைகளையும் நம்மால் தோற்கடிக்க முடியும்.

ஆனால் நமது அரசின் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரிகளால் ஏற்கனவே சிறு-குறு தொழில்கள், விவசாயம், நெசவுத்தொழில் என்று அனைத்தையும் நசுக்கி வைத்து இருக்கிறது. நாம் இந்த நிலையில் இருந்து மீண்டு வரவேண்டும். இதற்கு ஒரே யுக்தி நமது நாட்டில் உள்ள அனைவரின் கையிலும் பணம் புழங்கச்செய்ய வேண்டும்.

இந்த கடினமான சூழ்நிலையில் அரசு என்ன செய்கிறது. கொடூரமான கொரோனா காலக்கட்டத்தில் சாதாரண மக்களைப்பற்றி அரசு சிந்திக்கவில்லை. 15 பெரும் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து இருக்கும் அரசு, எங்காவது ஒரு சிறு குறு தொழிலுக்கோ, நெசவு அல்லது விவசாயத்துக்கோ ஒரு சதவீதமாவது கடன் தள்ளுபடி செய்து இருக்கிறதா... பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வேண்டும். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆக வேண்டும் என்பதே இந்த அரசின் நிலைப்பாடாக உள்ளது.

எங்கு பார்த்தாலும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழிலாளர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் பாதுகாப்பு கொடுங்கள் என்கிறார்கள். ஆனால், பெரும் தொழில்கள் நடத்துபவர்கள் எப்போதாவது பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டது உண்டா?

இந்த ஆட்சியில் எங்கும் வெளிப்படைத்தன்மை இல்லை. நான் இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன். இந்த நாடு நமது நாடு. இந்த உணர்வு நாம் அனைவருக்கும் வேண்டும். இது தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்களின் நாடு. நமக்கான நாள் விரைவில் வரும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Next Story