2016 சட்டமன்ற தேர்தலை போல தி.மு.க. 174 தொகுதிகளில் களம் காண்கிறது கூட்டணி கட்சியினர் 13 பேரும் ‘உதயசூரியன்' சின்னத்தில் போட்டி

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை போன்று, இந்த தேர்தலிலும் தி.மு.க. 174 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 13 வேட்பாளர்களும் ‘உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நேற்று நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதுதவிர தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
கடைசிநேர பரபரப்பு
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் மட்டும் தொகுதியை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு. தி.க. விலகியதால், கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அ.தி.மு.க. கூட்டணி பக்கம் செல்ல முயற்சிப்பதாக நேற்று மதியம் பரபரப்பான தகவல் வெளியானது.
ஆனால் அதே நேரத்தில், ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று மாலை வந்தனர். 3 இடங்கள் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தி.மு.க. தலைமையிலான கூட்டணியை உறுதி செய்தனர். இதன்மூலம் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்று வெளியான பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
கூட்டணி கதவு அடைப்பு
இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தி.மு.க. கூட்டணிக்கு நேற்றுமுன்தினம் ஆதரவு கடிதம் அளித்தார். மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரியும் தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அவர்களுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன்மூலம் தி.மு.க.வில் கூட்டணி கதவு அடைக்கப்பட்டுவிட்டது என்பது உறுதியானது.
தற்போது தி.மு.க.வில் 60 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 174 இடங்களில் தி.மு.க. களம் காண்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 174 இடங்களில் தி.மு.க. போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்
174 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட உள்ளனர். அதேபோன்று ம.தி.மு.க. (6 இடங்கள்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), மனிதநேய மக்கள் கட்சி (2 தொகுதியில் ஒரு இடம்), தமிழக வாழ்வுரிமை கட்சி (1), மக்கள் விடுதலை கட்சி (1), ஆதித்தமிழர் பேரவை (1) ஆகிய 13 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண உள்ளது.
எனவே தி.மு.க. கூட்டணியில் 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. (174 தொகுதிகள் கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் தே.மு.தி.க. (3 இடங்கள்), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), சமூக சமத்துவப் படை (1), விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி (1) என 180 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் தேர்தலை சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story






