டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு


டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு
x
தினத்தந்தி 19 April 2021 10:22 AM GMT (Updated: 19 April 2021 10:25 AM GMT)

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அதன்படி 20-ந் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளின் செயல்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 

இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. வரிசையில் நின்று வாங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்.  ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைப் பணியாளர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும்.

மதுக்கடையை நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 6 அடி சமூக இடைவெளியில் நிற்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். டாஸ்மாக் மதுப்பிரியரகள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story