மாநில செய்திகள்

கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்" சென்னை நீதிமன்றம் உத்தரவு + "||" + Temples and religious processions should be allowed everywhere, "the Chennai court ordered

கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்" சென்னை நீதிமன்றம் உத்தரவு

கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்" சென்னை நீதிமன்றம் உத்தரவு
"பிற மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்" என பெரம்பலூர் வி.களத்தூர் கிராமத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களும், மேற்குப் பகுதியில் இந்துக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், செல்லியம்மன் கோவில், ராயப்பா கோவில், மாரியம்மன் கோவில் என நான்கு கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவரும், எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வால் ஜமாத் சார்பிலும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, கோவில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது எனவும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கூறி, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல எனவும், மாற்று மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளதாகவும் கூறிய நீதிபதிகள், கோவில் ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்வலங்களும், அனைத்து சாலை, தெருக்களில் அனுமதிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலம் உள்ளதால், அந்த பகுதி வழியாக மற்றொரு பிரிவினர் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளனர்.