ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் எடுக்க முடியாது இம்மாதம் முதல் புதிய நடைமுறை அமல்


ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் எடுக்க முடியாது இம்மாதம் முதல் புதிய நடைமுறை அமல்
x
தினத்தந்தி 11 Jun 2021 5:32 PM GMT (Updated: 11 Jun 2021 5:32 PM GMT)

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் எடுக்க முடியாது இம்மாதம் முதல் புதிய நடைமுறை அமல்


சென்னை, 

கொரோனா நோய் பரவல் காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது வருங்கால வைப்புநிதி (பி.எப்.) கணக்கில் இருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பி.எப். கணக்கில் இருக்கும் தொகையின் ஒரு பகுதியை ஊழியர்கள் திரும்ப பெறலாம்.

இந்த நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை இந்த மாதம் (ஜூன்) முதல் பி.எப். கணக்கில் வந்து சேராது. ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில் அவர்களது பங்கை, பி.எப். கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும். மேலும் பி.எப். கணக்கில் இருந்து கொரோனா முன் தொகையையும் எடுக்க இயலாது.

எனவே இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று உங்கள் யூசர்நேம், பாஸ்வோர்டு உள்ளீடு செய்து, பி.எப். கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம். பி.எப். கணக்கில் ஆதார் இணைக்கப்பட்ட பின்னர் கடந்த கால நிலுவைத்தொகையினை உங்களின் கணக்கில் நிறுவனம் சேர்த்துவிடும்.

மேற்கண்ட தகவல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story