கச்சத்தீவு கடல் பகுதியில் பழைய பஸ்களை கடலில் இறக்கும் இலங்கை அரசு சமூகவலைத்தளங்களில் பரவும் படங்கள்


கச்சத்தீவு கடல் பகுதியில் பழைய பஸ்களை கடலில் இறக்கும் இலங்கை அரசு சமூகவலைத்தளங்களில் பரவும் படங்கள்
x
தினத்தந்தி 13 Jun 2021 2:08 AM GMT (Updated: 13 Jun 2021 2:08 AM GMT)

கச்சத்தீவு கடல் பகுதியில் பழைய உருக்குலைந்த பஸ்களை கடலுக்குள் இலங்கை அரசு இறக்கி வருவதாக சமூகவலைத்தளங்களில் படங்கள், தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராமேசுவரம், 

கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை பெருக்குவதாக கூறி உருக்குலைந்த பழைய பஸ்களை கடலுக்குள் இறக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவில் இருந்து கச்சத்தீவு வரையிலான கடல் பகுதியில் இவ்வாறு, பயன்படுத்த முடியாத பழைய பஸ்களின் இரும்பு கூண்டுகளை கடலில் இறக்கி மூழ்கடிக்கும் பணிக்காக தனியார் கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரையில் இருந்து பழைய பஸ்களை கப்பலில் ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டுவந்து, கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு 5 பஸ்கள் வீதம் கடலில் இறக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், ‘‘மீன்கள் இனப்பெருக்கம் என்ற ஒரு காரணத்தை கூறி தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க வருவதை தடுப்பதற்காகவே இலங்கை அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. கடலின் அடியில் உருக்குலைந்த பழைய பஸ்களை இறக்கி மூழ்கடிப்பதால் மீனவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு இலங்கை மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த திட்டத்தை நிரந்தரமாக கைவிட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக மீனவர்கள் பாரம்பரிய கடல் பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மீன்பிடிக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.

Next Story