பசியால் வாடும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் போலீசார் குடும்பத்தினர் ஒரு மாதத்துக்கும் மேலாக சேவை தொடருகிறது


பசியால் வாடும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் போலீசார் குடும்பத்தினர் ஒரு மாதத்துக்கும் மேலாக சேவை தொடருகிறது
x
தினத்தந்தி 13 Jun 2021 2:11 AM GMT (Updated: 2021-06-13T07:41:58+05:30)

சென்னையில் பசியால் வாடும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேடிச்சென்று உணவளித்து வருகிறார்கள். ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த சேவை தொடர்ந்து வருகிறது.

சென்னை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக சாலையோரம் வசிப்போர், ஏழை-எளியோர் உணவுக்காக கஷ்டப்படும் நிலை அறிந்து, தன்னார்வலர்கள் பலர் உணவு வினியோகிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போலீசார் குடும்பத்தினரும் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவளிக்கும் பணியில் சளைக்காமல் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ்காரர்களின் மனைவிகளும், அவர்களது பிள்ளைகளுமே இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் வீதி, வீதியாக சென்று சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவளித்து வருகின்றனர். இதுதவிர வாரத்தில் ஒருநாள் பிரியாணியும் சமைத்து வினியோகிக்கின்றனர்.

இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து தலைமை காவலர் ஆனந்தன் என்பவரது மனைவி ஜெயகுமாரி கூறியதாவது:-

எங்கள் குடியிருப்பில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் தனது கணவர் நினைவுதினத்தன்று 50 ஏழைகளுக்கு உணவளிப்பது வழக்கம். அந்தவகையில் கடந்த மாதம் கணவரது நினைவுநாளில் உணவளிக்க சென்றபோது, ஏராளமானோர் உணவுக்காக வந்துள்ளனர். அனைவருக்கும் உணவு கொடுக்க முடியாமல் அவர் தவித்து எங்களிடம் வந்து கூறினார். இதையடுத்து ஊரடங்கு காரணமாக சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவளிக்க முடிவு செய்தோம்.

அதன்படி எங்கள் குடியிருப்பில் வசித்து வரும் கிரேசி விக்டோரியா, உஷா வடிவேல், பார்கவி, பானு பொன்ரத்தினம் உள்ளிட்ட பெண்கள் ஒன்றுசேர்ந்தோம். எனது மகன் ஆகாஷ் மற்றும் போலீசாரின் பிள்ளைகள் கில்பத், அஷ்வின் உள்ளிட்ட மாணவர்களும் இந்த பணியில் இணைந்தனர். இதற்காக நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன், எங்களது சேமிப்பையும் பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் இன்றுடன் (நேற்று) 32 நாட்களாக இந்த சேவையை தொடருகிறோம்.

தொடக்கத்தில் 3 வேளைகளிலும் உணவுகள் வழங்கினோம். தற்போது மதியம் மட்டுமே உணவு வழங்கி வருகிறோம். பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் தேடிச்சென்று உணவு தேவைப்படுவோருக்கு வழங்கி வருகிறோம். புதன்கிழமைகளில் முட்டை, பிரிஞ்சி வழங்குகிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணி கொடுக்கிறோம். இதர நாட்களில் எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என வழங்கி வருகிறோம். நிலைமை சீரடையும் வகையில் இதுபோல ஏழை மக்களுக்கு உணவளிக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட இருக்கிறோம். எங்கள் பணியை பார்த்து குடியிருப்பில் உள்ள நிறைய பெண்களும் எங்களுடன் கைகோர்த்து உள்ளனர். அந்தவகையில் தற்போது தினந்தோறும் 500 பேருக்கு மதிய உணவு அளித்து வருகிறோம். எங்களை போலவே ஏழை மக்களின் பசிதீர்க்கும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story