சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை 9 பேர் அதிரடி கைது


சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை 9 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 13 Jun 2021 3:31 AM GMT (Updated: 13 Jun 2021 3:31 AM GMT)

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை சென்னையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

கொரோனா தொற்று ஒரு புறம் மக்களை அதிக அளவில் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் உலகத்தையே தலை கீழாக புரட்டி போட்டு விட்டது. கொரோனாவோடு போராடி வரும் இந்த சூழலில் கருப்பு பூஞ்சை என்னும் நோயும் மக்களை விரட்டி, விரட்டி தாக்கி வருகிறது. கருப்பு பூஞ்சை நோயாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. அண்மையில் கருப்பு பூஞ்சையால் தாக்கப்பட்டு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார்.

ஆனால் கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடிய நோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தும் தட்டுப்பாடாக உள்ளதால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

சென்னையில் போலீசார் இதை கண்காணித்து வருகிறார்கள். சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி. அருகே சிலர் கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் அண்ணாசாலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களை சோதனை போட்டபோது, அவர்களிடம் இருந்த 8 பாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கைப்பற்றப்பட்டது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த உம்முகுல்சம் (வயது 26), கானாத்தூரைச் சேர்ந்த பவுசானா (38), காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த விவேக் (25), செஞ்சியைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகிய 4 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் இருந்து இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து பாட்டில்களை கடத்தி வந்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் சி.டி.ஓ. காலனி பகுதியில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் தாம்பரம் போலீசார் மற்றும் தனிப்படையினர் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில், ஆன்-லைனில் விற்பனை செய்த வண்டலூரைச் சேர்ந்த சரவணன், அறிவரசன், விக்னேஷ், தம்பிதுரை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் கிடைக்கும் கருப்பு பூஞ்சை மருந்துகள் எப்படி வெளியே வந்தது?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story