பாதுகாப்பு வழிமுறைகளுடன் 27 மாவட்டங்களில், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இன்று முதல் திறப்பு


பாதுகாப்பு வழிமுறைகளுடன் 27 மாவட்டங்களில், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இன்று முதல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 7:36 PM GMT (Updated: 2021-06-14T01:06:45+05:30)

27 மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. சானிடைசர் தெளிப்புக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி, நோய்ப்பரவல் கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட 7 மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று முன்எச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த சுற்றறிக்கை அந்தந்த டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மூலமாக அந்தந்த மண்டல-மாவட்ட மேலாளர்கள் வழியாக கடை பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

* டாஸ்மாக் கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருக்க வேண்டும்.

* அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் உடல் தகுதி வாய்ந்த 55 வயதுக்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும்.

* டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* டாஸ்மாக் கடையின் முன்புறம் மதுபானம் வாங்க வரும் நபர்களின் கூட்டத்தை இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்கு படுத்த வேண்டும்.

* மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வருவோருக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது.

* டாஸ்மாக் கடைகள் திறக்கும்போதும், மூடும்போதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* கடையை சுற்றிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.

* மதுபானம் வாங்க ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது.

* மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்தாமல் கடை பணியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மதுபானம் வாங்க வருவோருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக் கூடாது.

* மதுக்கடை விற்பனையை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.

* டாஸ்மாக் கடையின் விற்பனையின்போது சமூக ஆர்வலர்களை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை சரியாக பின்பற்றாமலும், பணிக்கு வராமலும் உள்ள கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story