ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு விற்பனை ; சென்னையை முந்திய மதுரை


ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு  விற்பனை ; சென்னையை முந்திய மதுரை
x
தினத்தந்தி 15 Jun 2021 6:08 AM GMT (Updated: 2021-06-15T11:38:42+05:30)

டாஸ்மாக்கில் குவிந்த மதுப்பிரியர்களால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

சென்னை: 

ஊரடங்கு தளர்வு காரணமாக, தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் துள்ளி குதித்து ஆர்வத்துடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

தமிழகம் முழுவதும் ‘5 ஆயிரத்து 432 டாஸ்மாக்’ மதுக்கடைகள் உள்ளன. இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் கடந்த மாதம் (மே) 10-ந்தேதி மூடப்பட்டன. பல மாநிலங்களில் ஊரடங்கில் கொண்டுவரப்பட்ட தளர்வுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும், சமீபத்தில் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 14-ந்தேதி (நேற்று) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடையின் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், பணியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களிலும் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தை கட்டுப்படுத்த கடையின் முன்பாக தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையிலும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இயங்க தொடங்கின. கடைகள் முன்பு வேலி அமைக்கப்பட்டிருந்தன. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மதுபாட்டில்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடைகள் முன்பு அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ‘டாஸ்மாக்’ கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் அமைதியாக வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ‘டாஸ்மாக்’ கடை மூடப்பட்டதால், கவலையில் துவண்டு கிடந்த மதுப்பிரியர்கள் நேற்று பட்டாம்பூச்சி போல ‘டாஸ்மாக்’ கடைகள் முன்பு சிறகடித்து பறக்க தொடங்கினர். காலை 10 மணிக்கு தான் கடைகள் திறக்கும் என்றாலும், காலை 9 மணிக்கே ஆர்வமுடன் வந்தனர்.

கடைகள் திறக்கப்பட்டபோது, துள்ளி குதித்து ஆர்ப்பரித்தனர். இனம் புரியாத மகிழ்ச்சியில் வேண்டிய மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

அதேபோல அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் எலைட் கடைகளிலும் நேற்று பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கும் மதுபிரியர்கள் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு பிடித்தமான மதுவகைகளை வாங்கி சென்றனர்.

ஆனால், 34 நாள்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், பல இடங்களில் மதுப்பிரியர்களின் ஆர்வத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

சில மதுபானக் கடைகளில் மதிய வேளையிலேயே அனைத்து மதுபானங்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் கூறப்பட்டது. பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பான மதுவகைகள் கிடைக்கவில்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பே குவிந்த மதுப்பிரியா்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. சில கடைகளில் மது வாங்கிய மதுப்பிரியா்கள் துள்ளிக் குதித்து மதுபாட்டில்களுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ஒரு சில கடைகளில் மாலை 4 மணிக்கு மேல் இளைஞா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கடை மூடக்கூடிய மாலை 5 மணிக்கு முன்பு அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

சில கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும் வாங்கும் ஒரு சில நபா்கள் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். மதுக்கடைகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.நேற்று ஒரே நாளில், மொத்தம் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலேயே, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.96 கோடி ரூபாய் அளவிற்கு மது பானம் விற்பனை நடைபெற்று உள்ளது.

மக்கள் தொகையில் மதுரையை விட அதிக மடங்கு கொண்ட சென்னை மண்டலத்தில் கூட 42.96 கோடி ரூபாய்க்குதான் மது விற்பனை நடைபெற்றது. எனவே, சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story