போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்பி தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை


போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்பி தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2021 1:58 AM GMT (Updated: 17 Jun 2021 1:58 AM GMT)

போலீஸ் சூப்பிரண்டுவின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் அளித்து, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய பிளஸ்-2 மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை, 

மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக படித்து வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியின் விருப்பம் இல்லாமல் அவரது தாய்மாமாவுக்கு அவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்து, நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஆனால் அந்த மாணவி தனக்கு விருப்பமின்றி திருமண முயற்சி நடைபெறுவதாகவும், தனக்கு படிக்க வேண்டும் என்று ஆசை உள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அந்த மாணவி வீடு உள்ள இடம், மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அண்ணாநகர் போலீசார் விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அவருடைய பெற்றோரை அழைத்து விசாரித்தனர்.

அதைதொடர்ந்து மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி, அந்த மாணவியை காப்பகத்தில் தங்க வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த மாணவி தனது உறவினர் வீட்டில் இருந்துவந்தார்.

அதன்பின்னர் அவர், தனது பெற்றோருடன் இருக்கப் போவதாக அதிகாரிகளிடம் எழுதி கொடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் அந்த மாணவி, திடீரென்று தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, மாணவி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த அண்ணாநகர் போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story