தலையில் கல்லை போட்டு கொத்தனார் கொலை


தலையில் கல்லை போட்டு கொத்தனார் கொலை
x
தினத்தந்தி 18 Jun 2021 4:47 PM GMT (Updated: 18 Jun 2021 4:47 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே மைத்துனியை திருமணம் செய்து வைக்க மறுத்த கொத்தனாரை தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானூர், ஜூன்.19-
கோட்டக்குப்பம் அருகே மைத்துனியை திருமணம் செய்து வைக்க மறுத்த கொத்தனாரை தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது குடிக்கும் போது தகராறு
புதுச்சேரியையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் செல்வகுமார் (வயது 31). கொத்தனார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வகுமார், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்ற குப்புசாமி உள்பட 4 பேருடன் அங்குள்ள முந்திரிதோப்பில் மது குடித்துள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி மற்றும் நண்பர்கள் பீர்பாட்டிலால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். 
கல்லை தூக்கி போட்டு கொலை
அதன்பிறகும் ஆத்திரம் அடங்காமல் தலையில் கல்லை தூக்கிப் போட்டு விட்டு குப்புசாமியும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் கோட்டக்குப்பம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 
அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கொலை செய்ததாக சின்ன கோட்டக்குப்பத்தை சேர்ந்த குப்புசாமி (24), விஜய் (21), சேது என்ற ஜெயப்பிரகாஷ் (20), கன்னியப்பன் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
அவர்களிடம் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மைத்துனியுடன் பழக்கம்
செல்வகுமாரின் மைத்துனி அதாவது மனைவியின் தங்கை அடிக்கடி தனது அக்காளை பார்ப்பதற்காக சின்ன கோட்டக்குப்பத்துக்கு வந்து சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கும் குப்புசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவரை தனக்கு திருமணம் செய்து தருமாறு செல்வகுமாரிடம் குப்புசாமி கேட்டதாக தெரிகிறது.
ஆனால் இதற்கு செல்வகுமார் சம்மதிக்க மறுத்ததுடன் உடனடியாக அந்த பெண்ணை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமார் மீது குப்புசாமி ஆத்திரமடைந்தார். 
இதையடுத்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த குப்புசாமி நண்பர்களுடன் செல்வகுமாரை மது அருந்த அழைத்துள்ளார். இதை நம்பி செல்வகுமாரும் மது குடிக்க சென்றுள்ளார். அவர்களுடன் சேர்ந்து மது குடித்தததில் போதை தலைக்கேறிய நிலையில் பீர்பாட்டிலால் செல்வகுமாரை தாக்கியும், தலையில் கல்லை தூக்கி போட்டும் கொலை செய்து விட்டு குப்புசாமியும் அவரது நண்பர்களும் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மைத்துனியை திருமணம் செய்து வைக்க மறுத்த கொத்தனாரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சின்ன கோட்டக்குப்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story