பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:24 AM GMT (Updated: 19 Jun 2021 1:24 AM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கின் விசாரணையை முடித்து 6 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேநேரம், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் கொண்ட விசாகா கமிட்டியும் இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது.

இந்த விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில் தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இதுவரை 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறை அறிக்கை 3 வாரத்துக்குள் கிடைத்துவிடும். அதன்பின்னர் இந்த வழக்கின் புலன் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

பின்னர் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு, தனது அறிக்கையை ஏற்கனவே தமிழக உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்துவிட்டது என்றார்.

சிறப்பு டி.ஜி.பி., சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், விசாகா கமிட்டி அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும், அதன் நகல் இதுவரை என் கட்சிக்காரருக்கு வழங்கவில்லை. இது சம்பந்தமாக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். போலீசாரின் புலன்விசாரணையை மட்டுமே கண்காணிப்பதாகவும், விசாகா கமிட்டி அறிக்கை நகல் பெற சம்பந்தப்பட்ட கோர்ட்டை சிறப்பு டி.ஜி.பி. தரப்பு அணுகலாம் என்றும் கூறினார்.

பின்னர் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை விரைவாக முடித்து 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற ஜூலை 30-ந் தேதிக்குத்தள்ளிவைத்தார்.


Next Story